துமகூருவில் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பெண்ணின் மருமகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவரின் மருமகன் ராமச்சந்திரய்யா, சதீஷ் மற்றும் கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் சிம்புஹனஹள்ளி கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, இந்த வழக்கில் பெண்ணின் மருமகன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் பெல்லவி கிராமத்தைச் சேர்ந்த 42 வயது லட்சுமி தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், லட்சுமி தேவியின் மருமகனான பல் மருத்துவர் ராமச்சந்திரய்யா (47), சதீஷ் (38) மற்றும் கிரண் (32) எனத் தெரியவந்துள்ளது.

19 இடங்களில் உடல் பாகங்கள்

லட்சுமி தேவியின் மகள் தேஜஸ்வியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரய்யா. ஆகஸ்ட் 3-ஆம் தேதி, லட்சுமி தேவி தனது மகளைச் சந்திக்க வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஒரு நாள் கழித்து, அவரது கணவர் பசவராஜ், பெல்லவி காவல் நிலையத்தில் காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளார். ஆகஸ்ட் 7-ஆம் தேதி, சிம்புஹனஹள்ளியில் 19 இடங்களில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடல் பாகங்கள் பைகளில் அடைக்கப்பட்டு, பல இடங்களில் வீசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொரட்டகெரே போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, காணாமல் போனவர்களின் விவரங்களைச் சேகரித்தனர். அப்போது லட்சுமி தேவி காணாமல் போனது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது கணவர் பசவராஜ் உடல் பாகங்களை அடையாளம் காட்டினார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு மாருதி சுசுகி பிரெஸ்ஸா கார் உடல் பாகங்களை வீசுவதற்குப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தக் கார் சதீஷ் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சதீஷை விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். சதீஷ் மற்றும் கிரண் ஆகியோர் ஹொர்னாடில் இருந்து கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான ராமச்சந்திரய்யா, கொலையைச் செய்த பிறகு தர்மஸ்தலாவுக்குச் சென்றதாகவும், இதுவே அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

குற்றச் சம்பவத்தின் பின்னணி

லட்சுமி தேவி தனது மகளுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி, தங்கள் திருமண வாழ்க்கையில் தலையிடுவதாக ராமச்சந்திரய்யா குற்றம் சாட்டினார். இதுவே கொலைக்கான முக்கியக் காரணம் என துமகூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் கே.வி. தெரிவித்துள்ளார். "ராமச்சந்திரய்யாவின் முதல் திருமணம் விவாகரத்து நிலையில் உள்ளது. 2019-ஆம் ஆண்டு அவர் தேஜஸ்வியை திருமணம் செய்துள்ளார். மாமியாரின் தலையீட்டால் அவர் கோபமடைந்துள்ளார்." என்று அவர் மேலும் கூறினார்.

ஏன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசினர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அசோக் தெரிவித்தார். இந்தக் கொலை மனித பலி தொடர்பானதல்ல என்றும் அவர் மறுத்துள்ளார்.