பீகாரில் சாக்லேட் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து சிறுவர்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கழுத்தில் செருப்பு மாலைகள் போட்டு, முகத்தில் சுண்ணாம்பு பூசப்பட்டது. இந்தச் சம்பத்தின் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில், ஒரு மளிகைக் கடையில் சாக்லேட் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஐந்து சிறுவர்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கழுத்தில் செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவம் ஜூன் 5 அன்று நடந்ததாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரவலான கண்டனங்களை எழுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, கடைக்காரர், அவரது மகன் மற்றும் மற்றொரு கிராமவாசி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பற்றி காவல்துறை அதிகாரி ராமகிருஷ்ணா பிடிஐயிடம் பேசுகையில், "சிறுவர்களின் முகங்களில் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. மேலும், சிறுவர்கள் தாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது" என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களின் மனநலனை உறுதிப்படுத்த ஆலோசகர்கள் உதவி வருவதாகவும் அவர் கூறினார்.
பரபரப்பான வீடியோவில், கடைக்காரர் ஒரு தடியால் இரண்டு சிறுவர்களை அடித்து, அவர்கள் தங்கள் பெயரையும் தந்தையின் பெயரையும் கேமராவில் கூறும்படி கட்டாயப்படுத்துவது தெரிகிறது. ஒரு சிறுவனை அடித்து கேமராவை பார்க்கும்படி அவர் உத்தரவிடுகிறார். "அவர்கள் அனைவரும் என் கடையில் திருடும்போது பிடிபட்டனர்" என்று கடைக்காரர் கூறுகிறார். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள், சிறுவர்களுக்கு உதவாமல், அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டு வீடியோ எடுத்தனர். பயந்துபோன ஒரு சிறுவன், "நான் ஒரு சாக்லேட் மட்டுமே எடுத்தேன்" என்று கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மனிதநேயமற்ற இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
