தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கொள்கையாக வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டியவர் என்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடம் என்பது கற்பனை, தமிழகத்தில் பீகாரில் அச்சுறுத்தப்படுகின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த நிலையில், ஆளுநர் ரவி தமிழகத்தை இழிவுப்படுத்துவதையே வேலையாக வைத்துள்ளதாக திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, ''ஆளுநர் ரவி தமிழ்நாட்டையும், தமிழகத்தையும் இழிவுபடுத்துவதையே தன்னுடைய தொழிலாக கொண்டுள்ளார்.

தமிழர்களை திருடர்கள் என்றனர்

தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே வேலையாக வைத்துள்ளார். தமிழகத்தில் பீகாரை சேர்ந்தவர்கள் ஆளுநர் ரவி தவறான தகவலை கூறியிருக்கிறார். ஒடிசாவில் தேர்தல் நடந்தபோது அமித்ஷாவும், பிரதமர் மோடியும் அங்கு பிரசாரம் செய்தபோது ஒடிசாவை தமிழன் ஆள வேண்டுமா? ஓடிசா கோயில் சாவி தமிழர்களின் கையில் இருக்கிறது என தமிழர்களை திருடர்கள் போல் ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள்.

தமிழர்களை இழிவுப்படுத்துவதே கொள்கை

இதேபோல் தமிழ்நாட்டில் பீகாரில் அச்சுறுத்துப்படுவதாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டனர். ஆனால் ஜார்க்கண்ட்டில் வந்த குழுவிடம் தமிழகத்தில் வசிக்கும் பீகார் மக்கள், ''நாங்கள் தமிழகத்தில் நல்ல நிலையில் நல்ல பொருளாதார வசதியுடன் இருக்கிறோம். எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை'' என்று கூறியுள்ளனர். எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுப்படுத்துவதை ஆளுநரும், பாஜகவும் கொள்கையாக வைத்துள்ளனர்.

இதுதான் தமிழ் பற்றா?

எங்களின் தமிழ் பற்று தெரியுமா என மோடியும், பாஜவும் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் தமிழ் மொழிக்கு அவர்கள் ஒதுக்கியது ரூ.150 கோடி. சமஸ்கிருதத்துக்கு அவர்கள் ஒதுக்கியது ரூ.2,500 கோடி. இதுதான் தமிழ் பற்றா? இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மொழி சிறுபான்மையினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஆளுநர் கூறியுள்ளார். தமிழகத்தில் மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் ''தமிழகத்தில் எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. தமிழர்கள் எங்கள் சகோதரர்கள்'' என்று கூறியுள்ளனர்.

தேசிய கீதத்தில் திராவிடம்

தமிழக அரசு மீனவர்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று ஆளுநர் கூறியுள்ளார். மீனவர்கள் கைது செய்யப்படும்பொதெல்லாம் மோடியும், அமித்ஷாவும் மற்றும் ஆளுநரும் ஏதாவது ஒரு அறிக்கையாவது வெளியிட்டுள்ளனரா? மேலும் திராவிடம் என்பது கற்பனை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ளது ஆளுநருக்கு தெரியாதா?

கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டியவர்

பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் ஆளுநர் ரவி கமலாலயத்தில் வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டியவர். உச்சநீதிமன்றம் எப்போதும் ஆளுநரை பாராட்டியதில்லை. அவருக்கு குட்டு தான் வைக்கிறது. இனி ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தால் உச்சநீதிமன்றம் செல்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.