தமிழக அரசு 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் பல்வேறு சுகாதார சேவைகள் வழங்கப்படும். 

தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : தமிழக அரசு மக்களுக்கு சுகாதார திட்டங்களை செயல்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இந்த "நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

தமிழக அரசின் முழு உடற் பரிசோதனை திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் பொருட் செலவு இல்லாமல் முழு உடற் பரிசோதனைகள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள் சிறப்பு மருத்துவ வசதிகளோடு பெரிய அரங்குகள் அமைக்கப்படவிருக்கிறது. Master Health Check up என்று சொல்லக்கூடிய முழு உடற் பரிசோதனை மக்களைத் தேடி, மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று பரிசோதனைகள் செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் செயல்படுத்திட நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் படி உயர் மருத்துவ சேவைகள் வழங்க 862 மருத்துவ முகாம்கள் ரூ12.78 கோடி செலவில் செயல்படுத்தப்படும்" என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நிதி ஒதுக்கீடு

அதனை செயல்படுத்தும் வகையில், ஜூன் 2025 முதல் பிப்ரவரி முதல் மார்ச் 2026 வரை 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள். பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது