கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு பேருந்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலியாயினர். இந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்த விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. அதாவது திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமம் அருகில் நேற்று இரவு 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது.
கோர விபத்தில் 9 பேர் பலி
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதைபதைக்க வைக்கும் காட்சி
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அருகில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க்கின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்துக்கு காரணமான அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு பேருந்து ஓட்டுநர் கைது
பேருந்தை ஓட்டிசென்ற ஓட்டுநர் மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தாஹா அலி மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தாஹா அலியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
இதற்கிடையே இந்த விபத்தில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.


