10 Killed in Karnataka Bus Fire Accident: கர்நாடக மாநிலத்தில் லாரியும், தனியார் பேருந்தும் மோதிய கோர விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 48‍ல் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அதாவது பெங்களூருவிலிருந்து சிவமொக்கா சென்றுகொண்டிருந்த படுகை வசதி கொண்ட 'சீ பேர்ட்' சொகுசு தனியார் பேருந்தும் லாரியும் மோதின.

பேருந்து தீப்பிடித்து 10 பேர் பலி

லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் பெட்ரோல் டேங்க் சேதம் அடைந்து பேருந்து தீப்பிடித்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். பேருந்தில் சுமார் 29 பயணிகள் இருந்த நிலையில், இவர்களில் 10 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகள் ஜன்னல்கள் மற்றும் அவசர கதவுகள் வழியாக தப்பினர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு காரணம் என்ன?

இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி, சாலையின் தடுப்பைத் தாண்டி வந்ததால் விபத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுறது. ஆனால் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர் மீது பேருந்து உரிமையாளர் குற்றச்சாட்டு

இந்த விபத்துக்கு லாரி டிரைவரின் அலட்சியமே காரணம் என 'சீ பேர்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ''எங்கள் பேருந்தில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருந்தன. இரண்டு அவசர கதவுகளும் இருந்தன. ஆனால் இந்த சம்பவம் லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் நடந்தது. முகமது ரபீக் ஹுலாகர் பேருந்தை ஓட்டிச் சென்றார். மொத்தமுள்ள 29 இருக்கைகளில், 25 பேர் கோகர்ணாவிற்கும், இரண்டு பேர் சிவமொக்காவிற்கும், இரண்டு பேர் கும்தாவிற்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். 28 இருக்கைகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டன'' என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.