பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி.! வெளியான அசத்தல் அறிவிப்பு
சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை வேகம், கட்சி தேர்தல் முன்னேற்றம், வாஜ்பாய் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த மையக்குழு கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,
இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,
ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன்,
கரு நாகராஜன், எஸ்.ஆர்.சேகர், நவீன் குட்டில் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர். மைய குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகளை செய்த பிறகு தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது
தமிழக பாஜகவின் மையகுழு கூட்டம் நடைபெற்றது.. மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை வேகம் தமிழக பாஜகவிற்கு உத்வேகத்தை தந்தது..
தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் நின்று முழக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் இருக்கும் கோடான கோடி மக்கள் ஒருங்கிணைந்து வருவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு பிறந்துள்ளது. கட்சியின் அடிமட்ட தேர்தல் நாடு முழுவதும் ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பூத் நிலையிலும் கட்சியின் தேர்தல் நடைபெற முனைப்பு நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான கிளைகளின் தேர்தல் முடிந்திருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான கிளைகளில் தேர்தல் நடத்துவதற்கான முனைப்பு நடந்து வருகிறது. மண்டல மாவட்ட தலைவர் தேர்தல் முடிக்கப்பட வேண்டிய சூழல் நெருங்கி வருகிறது.
வருகின்ற 2025ல் தமிழக பாஜகவிற்கு மாபெரும் எழுச்சி தரும் ஆண்டாக அமையும்.. அதைத்தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்களில் பாஜக பெரிய முத்திரையை படைக்கும்.
இந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் வாஜ்பாயின் நூற்றாண்டு விழா ஆரம்பமாகிறது. இந்த நாட்டில் புதிய எழுச்சியை உருவாக்கி அடிமட்டத்து மக்கள் மற்றும் கிராமத்து மக்களுக்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கித் தந்து உலக அளவில் பெயர் வாங்கி தந்து இந்தியாவை உலகம் அறிய செய்தவர் வாஜ்பாய். அவருடைய நூற்றாண்டு விழா புதிய இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாக கொண்டாடப்பட வேண்டிய தினமாகும் அகில இந்திய அளவில் அதற்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறது.மாநில அளவிலும் அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது..இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இது சம்பந்தமான கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த விழாவை சாதாரண மக்களுக்கு பயன்படுத்தக்கூடிய அளவில் எப்படி கொண்டு சேர்ப்பது என கேட்டறிந்தார்.
2012ல் வாஜ்பாயின் 88 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய போது, ஏழை குழந்தைகளுக்கு திருமண வைப்பு நிதியாக 5000 கொடுத்தோம். இன்று 25 ஆயிரம் ரூபாய் ஏழை பெண்ணின் பெயரில் வைப்பு நிதி வைத்து அதை அவர்களது திருமணம் மற்றும் படிப்பிற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
திருமண வைப்பு நிதி மட்டுமல்லாது திருமணத்திற்கு தேவையான செலவு முதல் அனைத்தையும் செய்யக்கூடிய வகையில் செயல்படுவார்கள்.