சிவகங்கை

சிவகங்கையில் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சுகுமார் முன்னிலை வகித்தார்.

இதில், "வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 

ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு, மதிப்பீட்டு உச்சவரம்பை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 

கணினி உதவியாளர், முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கான ஊதிய விகிதத்தை மாற்றம் செய்திட வேண்டும்" உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ஊரக வளர்ச்சித் துறையினர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.