படுகாயங்களுடன் சுருண்டு விழுந்த குட்டி யானைக்கு தாயே எமனாக மாறிய பரிதாப சம்பவம்; முதுமலையில் நிகழ்ந்த சோகம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் படுகாயங்களுடன் சுற்றித் திரிந்த குட்டி யானையிடம் நெருங்க தாய் யானை மறுத்து வந்த நிலையில் காயமடைந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்த கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த பந்திப்பூர் புலிகள் காப்பக சாலையில் இன்று படுகாயங்களுடன் யானை குட்டி ஒன்று இருந்துள்ளது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் படுகாயங்களுடன் இருந்த யானை குட்டிக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர்.
ஆனால் தாய் யானை குட்டியின் அருகில் யாரையும் நெருங்க விடாமல் அனைவரையும் துரத்தியது. இதனால் மைசூரில் இருந்து நீலகிரி நோக்கி வந்த வாகனங்களும், மறு முனையில் நீலகிரியில் இருந்து மைசூரு சென்ற வாகனங்களும் சோதனைச் சாவடியிலேயே நிறுத்தப்பட்டன. கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் யானையை கடந்து செல்லும் பொழுது அந்த வாகனங்களை தாய் யானை தாக்க முயற்சித்தது. இதையடுத்து தாய் யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே படுகாயங்களுடன் போராடிய குட்டி யானை பரிதாபமாக உயிரழந்தது.
இதனைத் தொடர்ந்து கிரேன் உதவியுடன் இறந்த யானை குட்டியை அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே காத்திருந்த பொதுமக்கள் பின்பு மைசூர் சாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு குட்டி யானையை புலி வேட்டையாட முயற்சிக்கும் பொழுது பலத்த காயங்களுடன் குட்டி யானையை தாய் யானை காப்பாற்றியது. தொடர்ந்து யானைக் கூட்டங்களுடன் படு காயங்களுடன் சுற்றி வந்த குட்டி யானை பந்திப்பூர் சாலையில் செல்லும்போது திடீரென சாலையோரம் விழுந்து இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிவகங்கையில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா; மழை வேண்டி வினோத வழிபாடு
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பந்திப்பூர் சாலையில் தனது குட்டி இறந்ததால் யாரையும் அருகில் நெருங்க விடாமல் பாசப் போராட்டம் நடத்திய தாய் யானையின் காட்சிகள் வனத்துறையினரையும் சாலையில் பயணித்த பயணிகளையும் கண் கலங்கச் செய்தது.