நீதிபதிகளுக்கு சால்வை, மாலை, பூச்செண்டு, பரிசுகள் கொடுக்காதீர்கள்: உயர் நீதிமன்ற பதிவாளர் கண்டிப்பு
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சால்வை, பூங்கொத்து, மாலை, பரிசுகள் வழங்குப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சால்வை, நினைவுப் பரிசுகள், பூங்கொத்துகள், மாலைகள், பழங்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் வழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதித்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் (பொறுப்பு) எம். ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்.
நீதித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய விரிவான நடத்தை நெறிமுறைகளை வெளியிட்டுள்ள பதிவாளர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருகையின்போது, அவர்களை வரவேற்பதற்காக நீதித்துறை அதிகாரிகள் சாலையோரங்களில் நிற்கவோ காத்திருக்கவோ கூடாது எனக் கூறியுள்ளார். 2006, 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இதே போன்ற உத்தரவுகளை மீறும் வகையில் நீதித்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்றும் கண்டித்துள்ளார்.
"எனினும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் காரில் எந்த இடத்திற்காவது பணி நிமித்தமாகச் செல்லும்போது, பொறுப்பான நீதிமன்ற பணியாளர்கள், நகரம் அல்லது புறநகர்ப் பகுதியில் நீதிபதியை வரவேற்று, அவரது வாகனம் செல்ல வழிகாட்ட வேண்டும். நீதிபதிகள் தங்கும் இடத்திற்கு வரும் வழியில் எந்தவித சிரமமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற நேரத்திற்கு வெளியே தனிப்பட்ட முறையில் விஜயம் செய்தால், அவருக்கு தங்குமிடம் வழங்கப்பட்ட இடத்திலோ அல்லது நீதிபதி இறங்கும் ரயில் நிலையத்திலோ விமான நிலையத்திலோ நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே அவரை வரவேற்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தையை அவருகிட்ட விடக்கூடாது... பேஸ்புக் லைவ் வீடியோவில் புலம்பிவிட்டு இளம்பெண் தற்கொலை!
நீதித்துறை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் பணி நேரத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறக் கூடாது; நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கருப்பு கோட் மற்றும் கறுப்பு டை அணிவதைத் தவிர்க்க வேண்டும்; ஆனால் அவர்கள் விரும்பும் கோட் மற்றும் டை அணிய எந்த தடையும் இல்லை என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் வருகைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாலன்றி, அவர்கள் வருகைக்காக நீதித்துறை அதிகாரிகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகள் வருகை தரும்போது, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றாலும், அவர்களுக்கு மரியாதை நிமித்தம் ஏற்பாடு செய்யக்கூடாது; நீதித்துறை அதிகாரிகள் பதவி உயர்வு, இடமாற்றம் அல்லது எந்த வகையான சலுகைகளையும் கோரி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களுக்குச் செல்லக்கூடாது என்று பல்வேறு அம்சங்கள் புதிய நடத்தை விதிகளில் இடம்பெற்றுள்ளன.
ஸ்மார்ட் மீட்டரால் மின் கட்டணம் அதிகரிக்குமா? தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கம் என்ன?