ஸ்மார்ட் மீட்டரால் மின் கட்டணம் அதிகரிக்குமா? தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கம் என்ன?
ஸ்மார்ட் மீட்டர் மின் கட்டண முறையால் தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கூறி இருக்கிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மின் கட்டண முறையால் வீட்டு மின் நுகர்வோருக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.
தற்போது ஒரு நாளின் எல்லா எந்த நேர்த்தில் பயன்படுத்தும் மின் சாரத்திற்கும் ஒரே அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கு மாறாக, ஒரே நாளில் நேரத்திற்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் வகையில் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசு மின்சார நுகர்வோர் உரிமை விதிகள், 2020 இல் திருத்தம் செய்து, புதிய மின் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது.
புதிய முறையில் மின்சாரக் கட்டணம் ஒரே நாளில் நேரத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மின் தேவை அதிகமாக இருக்கும் நேரத்தில் (காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை) மின் கட்டணம் வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும். பகல் நேரத்தில் மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் குறைவாக இருக்கும். இந்த நேரத்தை அந்தந்த மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள் தீர்மானித்து கொள்ளும்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வரும். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் விவசாயத்திற்கான மின் நுகர்வு தவிர மற்ற அனைத்து விதமான தேவைகளுக்கான மின் நுகர்வுக்கும் இந்தப் புதிய கட்டண முறை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு சொல்கிறது.
இந்த புதிய கட்டண முறையை செயல்படுத்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டியது கட்டாயம் என்பதால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய நுகர்வோருக்கு தான் இந்த கட்டணம் அமலுக்கு வரும் என்று சொல்லபடுகிறது. இந்நிலையில், இந்த புதிய கட்டண நடைமுறையால் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் உயராது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில ஒழுங்குமுறை ஆணையத்திற்கே இருக்கிறது. தற்போது வரை உச்ச நேர கட்டணம் என்று வீட்டு நுகர்வோருக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசு புதிய மின் கட்டண முறையை அறிமுகம் செய்திருப்பதால் தமிழகத்தில் உள்ள சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறது.