குழந்தையை அவருகிட்ட விடக்கூடாது... பேஸ்புக் லைவ் வீடியோவில் புலம்பிவிட்டு இளம்பெண் தற்கொலை!
சனா படேலின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹேமந்த் மற்றும் அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் நாச்சரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் 29 வயது இளம்பெண் ஒருவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய சனா படேல் என்ற அந்தப் பெண் தனது கணவர் ஹேமந்த் படேலின் சித்திரவதை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறியுள்ளார்.
புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்தாலும், வெள்ளிக்கிழமை தான் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது சைப்ரஸில் இருக்கும் ஹேமந்த், இசை ஆசிரியராகவும் டிஜே ஆகவும் பணிபுரிகிறார். வைரலான லைவ் வீடியோவில் பேசிய சனா படேல், தனது மூன்று வயது மகனை ஹேமந்த் வசம் ஒப்படைக்கக் கூடாது என்றும், தன் பெற்றோர்களே பேரனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து சனா படேலின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹேமந்த் மற்றும் அவரது தாய் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 498-ஏ (குடும்ப வன்முறை) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனா, ராஜஸ்தானைச் சேர்ந்த ஹேமந்த் என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் ஹேமந்த் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இதனால் சனா மன உளைச்சலுக்கு ஆளாக இருக்கிறார். தட்டிக்கேட்டபோது ஹேமந்த் சனாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். இந்த பிரச்சினையால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, ஹேமந்த் சைப்ரஸுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். அதிலிருந்து இருவருக்கும் இடையே தொடர்பு குறைந்தது. ஹேமந்த் சனாவுக்கு போனில் பேசுவதையும் குறைத்துக்கொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக சனா போன் செய்தாலும் ஹேமந்த் போனை எடுத்துப் பேசாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி இனிமேல் தனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் அதட்டி இருக்கிறார்.
ஹேம்ந்த் தன்னை முழுக்க புறக்கணிக்கும் அளவுக்கு மாறிவிட்டதை எண்ணி, சனா மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை ஹேமந்த் சனாவுக்கு போன் செய்து தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். அவர் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சனா தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழ்க்கையை மாற்றிய கனடா லாட்டரி! 35 மில்லியன் டாலர் வென்ற இவர் யாரு தெரியுமா?!