தமிழக சட்டப்பேரவையில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர். இதனை  சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் ரகுபதி  கிண்டல் செய்தனர்

ADMK MLAs wear black bands : தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நேற்று முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று தமிழக சட்டப்பேரவைக் கூடியவுடன் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குறிப்பாக நாமக்கல் கிட்னி திருட்டு, கரூர் கூட்ட நெரிசல் பலி ஆகியவற்றை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்புப் பட்டையுடன் பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

 அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாட்டால் அதிமுக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கருப்புப் பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றார்.

அதிமுகவினருக்கு பிபி கூடிவிட்டதோ.? 

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது தொகுதிக்குட்பட்ட கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து, எம்எல்ஏக்கள் கையில் கட்டியுள்ள கருப்பு பட்டையை பார்த்து அனைவருக்கும் ஒன்று போல பிபி கூடிவிட்டதோ.? அப்படி நினைத்ததாக தெரிவித்தார். 

சபாநாயகர் அப்பாவு பேச்சைக் கேட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் குலுங்கி சிரித்தனர். இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, சிறையில் இருக்கக்கூடிய சிறைவாசிகளுக்கு ஒரு அடையாளம் கொடுப்பார்கள். அதுபோல தனி அடையாளத்தோடு அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என கிண்டலாக கூறினார்.