அதிமுக ஒருங்கிணைப்புக்கு எண்ட் கார்டு..! இபிஎஸ்யோடு கை கோர்த்த செங்கோட்டையன்
அதிமுக தலைவர்களை ஒருங்கிணைக்க குரல் கொடுத்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட உரசலுக்குப் பிறகு அமைதியாகிவிட்டார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு, அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என பிளவுப்பட்டுள்ளது. அதே நேரம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் வசம் கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 9 வருடங்களாக தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வி மேல் தோல்வி கிடைத்து வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். பிரிந்து சென்ற தலைவர்களை இணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராகத் திகழும் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டார். பிரிந்த தலைவர்களை இணைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தார். எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இது கட்சித் தலைமையுடன் உரசல்களை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து டெல்லி சென்ற செங்கோட்டையன் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அடுத்த சில நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்தார். அடுத்த என்ன செய்ய போகீறீர்கள் என்ற கேள்விக்கும் காலம் பதில் சொல்லும் என தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையனும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக நாமக்கல் கிட்னி திருட்டு, கரூர் கூட்ட நெரிசல் பலி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்புப் பட்டையுடன் பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாட்டால் அதிமுக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கருப்புப் பட்டை அணிந்து கலந்து . எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைப்பு தொடர்பாக குரல் கொடுத்தது செங்கோட்டையனுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாத காரணத்தாலும், பாஜகவின் தலைமையின் அறிவறுத்தல் காரணமாகவும் அமைதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.