கோவில்பட்டியில் மதுபோதையில் தந்தையைக் கழுத்தை அறுத்து மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மகன் இருவரும் அடிக்கடி மது அருந்திவிட்டு சண்டையிடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வண்ணா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (57). கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகன் ராகுல் காந்தி (27). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தந்தை மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பதால் இருவரும் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் முனியசாமி பாட்டிலை உடைத்து ராகுல் காந்தியை குத்த முயன்றதாகவும், மேலும் அவரது கையை முனியசாமி கடித்து வைத்ததாக கூறப்படுகிறது.

போதையில் தகராறு

மதுபோதையில் இருந்த முனியசாமி அங்கேயே படுத்து உறங்கி விட்டார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த மகன் ராகுல் காந்தி, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து முனியசாமி கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கையில் காயத்துடன் இருந்த முனியசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

காவல் நிலையத்தில் சரண்டர்

மேலும் அங்கிருந்த காவலர் ஒருவரிடம் வீட்டில் நடந்தது கூறிவிட்டு நேரடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று தனது தந்தையை கொலை செய்துவிட்ட விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி அதிக மது போதையில் இருப்பதால் போலீசாரால் தொடர்ந்து விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது. போதை தெளிந்த பிறகு தான் எதற்காக தந்தையை மகன் கொலை செய்தார் என்ற விவரம் தெரியவரும். தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.