பண மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.

செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு

இதன்பிறகு நீதிமன்றத்தின் நிபந்தனையை தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது ஜாமீனில் உள்ள செந்தில் பாலாஜி நீதிமன்றம் உத்தரவின்பேரில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆஜராகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இனி தேவைப்பட்டால் விசாரணை

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் தளர்வுகளை வழங்கியுள்ளது. அதாவது செந்தில் பாலாஜி இனிமேல் வாரம் இருமுறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக தேவையில்லை. இனி தேவைப்பட்டால் மட்டுமே அவரை விசாரணைக்கு அழைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தளர்வுகள் கொடுக்க வேண்டாம் என அமலாக்கத்துறை வாதம் முன்வைத்த நிலையில், ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வாரம் இருமுறை செந்தில் பாலாஜி ஆஜராகியிருக்கிறார். அப்படி இருந்தும் வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

இரு தரப்புக்கும் அறிவுறுத்தல்

மேலும் அமலாக்கத்துறை விசாரணையின்போது அதில் விலக்கு பெற வேண்டுமானால் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறிய நீதிபதிகள் அப்படி அவர் விசாரணைக்கு இடையூராக செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என அமலாக்கத்துறைக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.