நடிகர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என கூறி தவெக நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை 

TVK functionary suicide note : தமிழக வெற்றிக் கழகம்தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழக அரசியல் வட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணமாக விஜய்யை பார்ப்பதற்காக பொதுமக்கள் சுமார் 4 மணி நேரம் வெயிலில் காத்திருந்தது. அதிகளவிலான கூட்டம் கூடியது. காவல்துறை பாதுகாப்பு குறைவு முக்கிய காரணங்களாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானத்தில் கரூரை சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் - 41 பேர் பலி

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என தவெகவினர் கூறி வருகிறார்கள். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா தவெக கூட்டத்துக்கு அனுமதி கோரியபோது, போலீஸ் மறுத்தது. அதற்கு பதிலாக நெரிசலான வேலுசாமிபுரம் இடத்தை ஒதுக்கியதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். செந்தில் பாலாஜி இதில் தலையிட்டு தடை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே செந்தில் பாலாஜி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழப்பு விவரங்களை வெளியிட்டார். இது "முன்கூட்டிய அறிவிப்பு அல்லது சதி" என சமூக வலைதளங்களில் விவாதம் எழுப்பியுள்ளது.

தவெக நிர்வாகி தற்கொலை

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் தவெக நிர்வாகி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டார். கடிதத்தில்: "கரூர் மாவட்டத்தில விஜய் வருகை போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை, அதில் விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தாகள். செந்தில் பாலாஜிஅவர்கள் நூதன முறையில் நெருக்கடி கொடுத்து பொதுமக்கள் செந்தில் பாலாஜியால் இந்த துயரம் சம்பவம் நடைபெற்றுள்ளது போலீசாரும் இதற்கு உடைந்தையாக இருந்துள்ளனர். எனவே செந்தில் பாலாஜியை கைது சிறையில் அடைக்க வேண்டும் என அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.