செங்கோட்டையன் மட்டுமின்றி அதிமுகவில் மேலும் பலர் தவெகவில் இணைவார்கள் என்று துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு செங்கோட்டையன் முக்கிய கருவியாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவது இப்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக் ஆக உள்ளது. இதற்கேற்ற வகையில் இன்று காலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யையும் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதனால் அவர் தவெகவில் இணைந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
செங்கோட்டையனின் வருகை தவெகவுக்கு புத்துணர்ச்சி
தமிழக அரசியலில் நீண்ட நெடிய அனுபவம்வாய்ந்த செங்கோட்டையனின் வருகை தவெகவுக்கு பெரும் புத்துணர்ச்சி கொடுக்கும் என்றும் அனுபவம் இல்லாத தலைவர்களுடன் தடுமாறும் தவெகவுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செங்கோட்டையன் மட்டுமல்ல; அதிமுகவில் மேலும் பலர் தவெகவில் இணைவார்கள் என்று துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனை சந்தித்த துக்ளக் ரமேஷ்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துக்ளக் ரமேஷ், ''செங்கோட்டையன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழந்தார். செங்கோட்டையனுடன் எனக்கு 42 ஆண்டுகளுக்கு மேல் தொடர்பு இருந்து வருகிறது. செங்கோட்டையன் தவெகவில் இணையப்போவதாக தகவல் வெளியான நிலையில் அவரை சந்தித்து பேசினேன். செங்கோட்டையன் அதிமுகவில் நிலவும் விருப்பத்தகாத சூழ்நிலை குறித்து என்னிடம் தெரிவித்தார்.
தவெகவுக்கு மிக முக்கியமான கருவி
செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், அவரது நலம் விரும்பிகள் அவர் தவெகவில் இணைந்து விஜய் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.தவெகவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான கருவியாக செங்கோட்டையன் இருப்பார். செங்கோட்டையனுக்கு தவெகவில் வழங்கப்படும் பொறுப்புகள், முக்கியத்துவத்தை பார்த்து அதிமுகவில் அதிருப்தி மனநிலையில் இருக்கும் சிலர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளது.
மேலும் பலர் தவெகவில் இணைவார்கள்
தவெகவுக்கு திமுகவுக்கு போட்டியளிக்கும் ஒரு சமமான அரசியல் சக்தியாக வலிமையுடன் உள்ளது. சில பகுதிகளில் அதிமுகவை விட தவெகவுக்கு தான் கூடுதல் ஆதரவு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. சமீபகாலமாக விஜய் எம்.ஜி.ஆரின் புகழை பேசி வருவதால் அதிமுகவின் தொண்டர்கள், அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளின் பார்வை விஜய் பக்கம் திரும்ப அதிகம் வாய்ப்புள்ளது. அவர்கள் அடுத்தடுத்து தவெக இணையும் சூழல் உள்ளது'' என்று கூறியுள்ளார்.


