விஜய் - செங்கோட்டையன் சந்திப்பு..! நெருப்பு கக்கும் அரசியல் களம்!
தமிழக அரசியலில் அனுபவம்வாய்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். இதனால் செங்கோட்டையன் தவெகவில் விரைவில் இணையப் போவது உறுதியாகியுள்ளது.

மூத்த தலைவர் செங்கோட்டையன்
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். ஆனால் அதன்பிறகு அமைதியாக இருந்த செங்கோட்டையன் யாரும் எதிர்பார்க்காதவிதமாக விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.
விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு
இந்த நிலையில், இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். இதனால் அவர் தவெகவில் இணையப் போவது உறுதியான நிலையில், இப்போது செங்கோட்டையன் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு சென்றார். அங்கு தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசி வருகிறார். ஆகவே தவெகவில் செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையனுக்கு புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பொறுப்பு
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் 50 ஆண்டு காலம் அனுபவம்வாய்ந்தவர். தவெகவின் அனுபவமிக்க தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், செங்கோட்டையனின் அரசியல் வருகை தவெகவில் பெரும் மாற்றத்தை உருவாக்கும். இதனால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பிரசாரத்தை திட்டமிட போகும் செங்கோட்டையன்
செங்கோட்டையனை சந்திப்பதற்கு முன்பு விஜய் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அளவில் பொறுப்புகளை கொடுத்து தனது பிரசார பயணத்தையும் அவரே திட்டமிடும் வகையில் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

