அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைவு ஏற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசியிருப்பது தான். ஆட்சி மாற்றத்திற்கு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதற்கு சசிகலாவும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசியுள்ளார் செங்கோட்டையன். அவர் கருத்தை வரவேற்கிறேன் என ஒபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியுள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்தவருமான ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தில் செங்கோட்டையன் சொன்னதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். எங்களிடம் அவர் தொடர்பில் இல்லை. அவர் தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இருக்கிறார். அவருக்கு அங்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அவருடைய எண்ணத்தை அனைத்து தொண்டர்களும் விரும்புகின்றனர்; இதை எல்லோரும் வரவேற்கின்றனர். அவர் 10 நாட்கள் வரை கெடு கொடுத்துள்ளார். அதன் பிறகு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.

அதிமுக மீது அனைத்து தரப்பு மக்களும் பாசம் வைத்துள்ளனர். அதிமுகவினர் ஒன்றிணைவதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்பதில் அனைவரும் ஒத்த கருத்துடன் இருப்பர் என்றார்.