காலையில் செங்கோட்டையன்! அடுத்து சசிகலா! பதற்றத்தில் இபிஎஸ்!
அதிமுகவை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர்கள் முயற்சி செய்தும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்று கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சசிகலா அறிக்கை வெளியிட்டு, செங்கோட்டையனைப் பாராட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன்: அதிமுகவை ஒன்றிணைக்க நான், நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சிவி சண்முகம் பொதுச்செயலாளர் சந்தித்தோம். ஆனால் அவர் ஏற்கும் மனநிலையில் இல்லை. வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்ஜிஆர் சொல்லிக் கொடுத்த பாடம். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அவர்கள் அதிமுகவில் நிபந்தனையின்றி இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்தார்.
இந்நிலையில் செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பை அடுத்து சசிகலா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்.
அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர் தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் அவர்களின் கருந்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதரர் செங்கோட்டையன் அவர்களைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகளின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது.
எனவே, திமுக என்ற தீயசக்தி நம்கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும். செறுக்கோடும் மிளிரும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! நாளை நமதே! வெற்றி நிச்சயம்! பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க! புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க! நன்றி வணக்கம் என தெரிவித்துள்ளார்.