பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை டெபாசிட் இழக்கச் செய்வதே எங்கள் லட்சியம் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் மத்திய அரசு தமிழகத்தைப் போலவே புதுச்சேரியையும் வஞ்சிக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கடுமையாக சாடினார். இந்நிலையில் விஜய்யின் கருத்து தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் விஜய்க்கு அரசியல் தொடர்பாக ஏதாவது தெரியுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6000 கொடுக்கிறது. குமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் தரமான நான்கு வழிச்சாலை போடப்பட்டு நாட்டின் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் வீட்டுக்கு வீடு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பற்றி விஜய்க்கு தெரியுமா?
விஜய் கவுன்சிலர் கூட ஆகவில்லை. நேரடியாக முதல்வராக தான் வருவேன் என்று சொல்கிறார். இதை எப்படி ஏற்க முடியும். அவர் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்று காட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு பதில் அளித்துள்ள தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “விஜய் கவுன்சிலர் கூட இல்லை என்று நயினார் சொல்கிறார். அவர் பாஜகவுக்காக பேசவில்லை. அதிமுகவுக்காக பேசுகிறார். அவர் பேசாமல் அதிமுகவில் இணைந்துவிடலாம்.
நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை டெபாசிட் இழக்கச் செய்வதே எங்கள் லட்சியம்” என தெரிவித்துள்ளார்.


