நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கியதில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருவதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கியதும் தொடக்கத்தில் விஜய்யை ஆதரித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுத்தடுத்த கூட்டங்களில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விஜய்யை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.
குறிப்பாக கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், “Tvk Tvk என்று சொல்லும்போது எனது டீ விற்க டீ விற்க என கேட்கிறது. அதே போன்று தளபதி தளபதி என்று சொல்லும்போது எனக்கு தலைவிதி தலைவிதி என கேட்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் பின்னர் தவெக தொண்டர்களும் சற்றும் விட்டு கொடுக்காமல் சீமானை விமர்சித்தும், அவருக்கு எதிராகவும் இணையத்தில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான செல்லூர் ராஜூ பேசுகையில், “சகோதரர் சீமான் அண்மை காலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். குறிப்பாக தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டதில் இருந்து சீமான் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருகிறார். எங்கள் தலைவர்கள் புரட்சி தலைவி அம்மா, புரட்சி தலைவர் எம்ஜிஆர், அண்ணா போன்றவர்களை விமர்சிக்க சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
