எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் மற்றும் 2026-ல் முதல்வராக வேண்டி செல்லூர் ராஜூ மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுத்தார். திமுக ஆட்சியில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், எடப்பாடி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்றும் கூறினார்.
மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி, 2026 ஆம் ஆண்டு முதல்வராக வேண்டியும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தங்கத் தேர் இழுத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தங்க தேர் இழுத்துள்ளோம். எல்லோரையும் மனம் உருக வேண்டியுள்ளோம் என கூறினார்.
தங்க தேர் இழுத்த செல்லூர் ராஜூ
அதிமுக மும்மத வழிபாட்டை எப்பொழுதும் எடுக்கும் என தெரிவித்தவர், இந்தாண்டு சித்திரை திருவிழா நடந்ததால் வழிபாடு எடுக்க முடியவில்லை என கூறினார். அழகர் வரும்போதும் மழை , போகும் போதும் மழை பெய்த்தாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வலம் வந்து நிர்வாகத்திறமையுடன் நல்ல ஆட்சியை தருவார். வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் போது உயிரிழப்புகள் ஏற்படுவதுவதாக கூறிய அவர், இந்தாண்டு 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மதுரை மக்களாகிய நாம் மன வருத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் தான் சித்திரை திருவிழாவின் போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது எனவும் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.
