Seeman : நேற்று எடப்பாடி.. இன்று விஜய்.. அரசியலில் புது கணக்கு போடும் சீமான்.. கனவு பலிக்குமா?
விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தலை புறக்கணித்துள்ள அதிமுக வாக்குகளையும், நடிகர் விஜய் ரசிகர்களின் வாக்குகளையும் பெறும் வகையில் சீமான் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
விஜய்யும் அரசியலும்
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல் தான் தனக்கு இலக்கு என தெரிவித்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். மாணவர்களுக்கு பரிசு, வீடு இல்லாதவர்களுக்கு வீடு என நலத்திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்யத் தொடங்கியுள்ளார். இந்தநிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி விஜய் பாராட்டி வருகிறார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!
விஜய்க்கு சீமான் பாராட்டு
ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது; ‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! என குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடிக்கு சீமான் ஆதரவு
இதே போல நேற்று கள்ளக்குறிச்சி விஷச்சாரய மரணத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சீமான் ஆதரவு தெவித்தும் பதிவிட்டிருந்தார். அதில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதாக சீமான் கூறியிருந்தார்.
புது கணக்கு போடும் சீமான்
இந்தநிலையில் விக்கிவராண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்த நிலையில், அக்கட்சியின் வாக்குகளை பெறும் வகையில் அதிமுகவிற்கு நேரடியாக சீமான் ஆதரவு தெரிவித்திருந்தார். இன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கி வரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள சீமான். இதன் மூலம் அதிமுக மற்றும் விஜய் ரசிகர்களின் வாக்குகளை பெற்று விக்கிரவாண்டி தேர்தலில் திமுக மற்றும் பாமகவிற்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.