பெரியாரை விமர்சித்து பாரதியாரை தூக்கிப் பிடிக்கும் புதிய அரசியல் நிலைப்பாட்டை சீமான் எடுத்துள்ளார். திராவிட கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் பிராமண சமூகத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பன பாரதியார் சமத்துவ முப்பாட்டன்.. ஈவெரா பெரியார் சாதி வெறியர் என்ற முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை சார்பாக பாரதியை போற்றுவோம் பாரதிரப் போற்றுவோம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் முயற்சியில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஆர்எஸ்எஸ்ஸின் துணை அமைப்பான விஜில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு அரங்கம் அதிர பேசினார். ஆரம்ப காலத்தில் தமிழ் தேசியம் மட்டுமே பேசி வந்த சீமான் நாளடைவில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படும் சுரண்டப்படும் அவல நிலை குறித்தும் கால்நடைகள் மற்றும் சிறு உயிரினங்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க தொடங்கினார்.

குறிப்பாக நீர் வளம், விவசாயம் போன்ற விஷயங்களில் டாக்டர் ராமதாசுக்கு அடுத்து தமிழகத்தில் உருப்படியான வாதங்களையும் இயற்கை சுரண்டப்படும் நிலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது குறித்தும் தொண்டை தண்ணீர் வற்ற சீமான் பேசி வருகிறார். இது எவ்வளவு தூரம் மக்களை சென்று சேர்ந்துள்ளது என்பது தனி விஷயம். ஆனாலும் பொதுநலத்தோடு வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு நாட்டின் வளத்தை கருத்தில் கொண்டு முன் வைக்கப்படும் கருத்துக்கள் யார் வாயில் இருந்து வந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய விஷயமே.

இந்தநிலையில் தான் திராவிட இயக்கங்களின் தந்தை என போற்றப்படும் ஈவெரா ராமசாமி நாயக்கர் எனும் தந்தை பெரியார் குறித்து கடந்து சில வருடங்களாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர் கருத்துக்களை தெரிவித்தும், சில விஷயங்களை அம்பலப்படுத்தியும் வருகிறார். இதன் தொடர்ச்சியாக தான் பெரியாரை விமர்சிக்கும் அதே வேளையில் பிராமண குலத்தில் பிறந்த பாரதியாரை தூக்கிப்பிடித்து அவரது கருத்துக்களை அனைத்து மக்களிடம் சென்று சேரும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் மற்றும் சீமான் ஆகியோர் பேசி வருகின்றனர்,

இது குறித்து சிறிது பின்னோக்கி பார்த்தால் தமிழகத்தில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக 3 % குறைவான அய்யர் மற்றும் ஐயங்கார் எனப்படும் பிராமண பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இருந்து அழுத்தம் தாங்க முடியாமல் கேரளாவில் பெரும் பகுதியும் மும்பை, ஜாம்ஷெட்பூர், டெல்லி, ஐதராபாத் போன்ற பல பகுதிகளிலும் சென்று செட்டில் ஆகிவிட்டனர். மீதமுள்ள இரண்டு சதவீத பிராமணர்களையும் திராவிட கட்சிகள் தங்களுக்கு அரசியல் பின்னடைவு ஏற்படும்போதெல்லாம் அவர்களது பெயரை பயன்படுத்தி வெளுத்து வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது நாம் பார்த்து வரும் விஷயமாகும்.

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் தமிழகத்தில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே பிராமணர்கள் உள்ளார்கள் இதுவே அண்டை மாநிலமான கேரளாவின் மக்கள் தொகையில் பார்க்கும்போது ஏழு சதவீத தமிழ் பிராமணர்கள் வசிக்கிறார்கள். இந்த பிராமணர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து முதல் முறையாக வெளிப்படையாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஆதரவு கொடுப்பதோடு மட்டுமின்றி பிராமணர்களை அதிக அளவில் எதிர்த்து வந்த திமுக கட்சியினர் மற்றும் பெரியாரின் கொள்கைகளை பிராமண கடப்பாரை கொண்டு தகர்த்தெறிவேன் என சீமான் கூறியிருப்பதால் தமிழக பிராமணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திராவிட கட்சிகள் தோன்றிய பிறகு தமிழகத்தில் பிராமணர்களுக்கு ஆதரவாக ஒரே ஒரு தலைவர் கூட வெளிப்படையாக தைரியமாக கருத்து தெரிவித்ததில்லை. பிராமணர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்த சீமானுக்கு அந்த சமூகத்தினர் தங்களது விசுவாசத்தை ஓட்டு வாயிலாக வெளிப்படுத்துவார்களா? அல்லது வழக்கம் போல கடந்து சென்று விடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.