இனிமேல் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வேன். முக்கியமாக மக்களுக்கு நல்லது நடக்கிற ஆட்சியை, குறிப்பாக அம்மாவுடைய ஆட்சியை அமைத்துக் காட்டுவேன். நிச்சயம் நல்லது செய்வேன்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் இணைந்து வி.கே.சசிகலா கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ‘‘ 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் நாள்தோறும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறேன். அதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2026 தேர்தலில் நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன். மக்களுக்கு எது நல்லது? எப்படி ஆட்சி செய்தால் மக்களுக்கு பிடிக்கும்? நிச்சயமாக தேர்தலை சந்திப்பேன். எல்லோருடனும் பேசுகிறேன். எல்லாம் செய்கிறேன். அந்த மாதிரி எல்லாம் ஒதுங்கி இருக்கிற ஆள் நான் இல்லை. அதையும் சொல்லிக் கொள்கிறேன். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததே சில புரியாத நபர்கள் செய்த தவறுகளால் இந்தத் தவறு நடந்து விட்டது.

இனிமேல் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வேன். முக்கியமாக மக்களுக்கு நல்லது நடக்கிற ஆட்சியை, குறிப்பாக அம்மாவுடைய ஆட்சியை அமைத்துக் காட்டுவேன். நிச்சயம் நல்லது செய்வேன். நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தத்தில், மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது ஏற்கனவே உள்ள நடைமுறைதான். அதில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்காமல், பெயர் மாற்றம் தொடர்பாக கருத்துக்களை திமுக முன்வைத்து வருகிறது.

தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற மறுக்கிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக எதுவுமே தெரியாமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சனம் வைத்துள்ளார். திமுக ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவானவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், ஆட்சியை விமர்சனம் செய்தால் வேட்டைக்கு செல்வது போல சென்று, காவல்துறையினர் கைது செய்வார்கள். அந்த அளவுக்கு கேவலமான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த காலத்தில் சிலர் செய்த தவறின் காரணமாகவே, திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு, தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்றார்.

