அதிமுக, பாஜக, தவெக ஒன்று சேர்ந்தால் டெபாசிட் இழப்பார்கள் என்று நடிகரும், திமுக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் காசு கொடுத்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகே தவெகவின் அரசியல் கணக்குகள் முற்றிலுமாக மாறி விட்டதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்துக்கு முன்பு மத்தியில் ஆளும் பாஜகவையும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவையும் விஜய் கடுமையாக சாடியிருந்தார். ஆனால் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு பக்கபலமாக இருந்தது இந்த இரு கட்சிகள் தான்.

அதிமுக, பாஜக, தவெக கூட்டணியா?

இதனால் இப்போது மனம்மாறிய விஜய், கூட்டணி சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும், தனியாக நின்றால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்துள்ளதாகவும் அதிமுக, பாஜக கூட்டணியில் தவெக இணையப் போகதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் தங்களது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில்லை என தவெகவினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

எஸ்.வி.சேகர் பேட்டி

தேர்தலில் அதிமுக, பாஜக, தவெக கூட்டணி சேர்ந்தாலும் தங்களை வீழ்த்த முடியாது என திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தேர்தலில் அதிமுக, திமுக, தவெக ஒன்று சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று நடிகரும், திமுக ஆதரவாளரும், மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

உயிரை திரும்ப கொண்டு வர முடியாது

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், ''நல்லவேளை பிணங்களை எடுத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள். நான் ஆறுதல் சொல்கிறேன் என்று விஜய் சொல்லவில்லை. ஆகவே அவரின் மன தைரியத்தை நீங்கள் பாராட்ட வேன்டும்'' என்று கிண்டலடித்தார். தொடர்ந்து பேசிய எஸ்.வி.சேகர், ''விஜய் நேரில் வர வேண்டும் என பணத்தை திருப்பிக் கொடுத்த சங்கவி என்ற பெண்ணை பாராட்டுகிறேன். யாராக இருந்தாலும் இழந்த உயிரை திரும்ப கொண்டு வர முடியாது. விஜய் 8 கோடி ரூபாய் கொடுத்து விட்டால் உயிர் திரும்பி வந்து விடுமா?

சட்டசபை பனையூரில் நடக்குமா?

விஜய் பனையூர் அரசியல் செய்து குழந்தைத்தனமாக உள்ளார். நாளை விஜய் ஓட்டுப்பெட்டிகளை பனையூர்கொன்டு வந்து ஓட்டு போடுங்கள் என்று சொல்வார். ஒருவேளை எம்.எல்.ஏ ஆனால் கூட மக்களை எல்லாம் கோரிக்கைகளுக்காக எனது வீட்டுக்கு வர வேண்டும் என்று கூறுவாரா? சட்டசபை பனையூரில் நடக்கட்டும். நான் பனையூர் வர மாட்டேன் என்று சொல்வாரா?'' என்றார்.

காசு கொடுத்து கூடும் கூட்டம்

மேலும் பேசிய அவர், ''விஜய் எந்த கூட்டணியையும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஏனெனில் யாரையும் சமமாக நடத்தக்கூடிய மனோபாவம் அவருக்கு இல்லை. விஜய்க்கு கூடும் கூட்டம் காசு கொடுத்து அழைத்து வரப்படும் கூட்டம். கரூரில் கூடிய கூட்டம் இப்போது ஏன் பனையூரில் வரவில்லை? அவர் அஜித்குமார், அனிதா ஆகியோர் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்க செல்லும்போது ஏன் வரவில்லை? விஜய் உதயநிதியை தன்னுடைய மிகப்பெரிய எதிரியாக பார்க்கிறார்.

அதிமுக, தவெக, பாஜக டெபாசிட் இழக்கும்

கரூரில் திமுகவுக்கு போட்டியாக கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற வெறியினால் ஏற்பட்ட விளைவுதான் அங்கு நடந்த சம்பவம். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக, தவெ கூட்டணி வைத்தால் ஒரு சிறுபான்மையினர் ஓட்டு கூட விஜய்க்கும் வராது. அதிமுகவுக்கும் வராது. அவர்கள் 3 பேரும் டெபாசிட் இழக்க கூட வாய்ப்பு இருக்கிறது. இப்ப இருக்கக்கூடிய கூட்டணி தொடர்ந்தது என்றால் திமுக 7வது முறையாக ஆட்சியை பிடித்து ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார்'' என்று கூறியுள்ளார்.