ஆவணி மாத சுப முகூர்த்த நாளில் பத்திரப் பதிவு வரலாற்று சாதனை படைத்துள்ளது. கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டில் ஒரு நாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்.

Tamil nadu land registration : சொந்தமாக நிலம் அல்லது வீடு வாங்க வேண்டும், சொந்த நிலத்தில் வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது நடுத்தர வர்க்க மக்களின் கனவாகவே இருக்கும். அந்த வகையில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய அளவில் நிலம் கிடைக்காதா என ஆவலோடு காத்திருப்பார்கள். அந்த வகையில் தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதை விட நிலத்தில் முதலீடு தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே வருடத்தில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரிப்பதால் கோடீஸ்வரர்கள் முதல் நடுத்தர வர்க்க மக்கள் வரை நிலத்தை சேமிப்பாக வாங்கி வருகிறார்கள்.

பதிவுத்துறையில் கொட்டோ கொட்டும் பணம்

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதிலும் விஷேச நாட்கள் என்றால் கேட்கவா வேண்டும் கூட்டம் அலைமோதும். எனவே பத்திர பதிவு துறை சார்பாக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு பத்திர பதிவு நடத்தப்படும். அந்த வகையில் ஆவணி மாத சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவானது வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான 04.09.2025 வியாழக்கிழமை அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 04.09.2025 ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் 

ஒரே நாளில் 274 கோடி ரூபாய் வசூல்

அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.

இதற்கு முன்னதாக 2025-26 ம் நிதியாண்டில் கடந்த 30.04.2025 அன்று ஒரே நாளில் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதே நிதியாண்டில் இதற்கும் அதிகமாக 04.09.2025 இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நான் வருவாய் வசூலில் முதல் முறையாக 2025-26 ம் நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி தெரிவித்துள்ளார்.