2025ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7-8 அன்று நிகழும். இதனையடுத்து திருச்செந்தூர் முருகன் கோவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Temple closures during eclipse : சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் ஏற்படும் வானியல் நிகழ்வு ஆகும். 2025-ஆம் ஆண்டில் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளது. முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நிகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் தெரியவில்லை. இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7-8, 2025 அன்று நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாகும், இது இந்தியாவில் இரவு 9:50 மணி முதல் நள்ளிரவு 1:26 மணி வரை தெரியும். இந்த கிரகணம் கும்ப ராசியில் நிகழ்கிறது, மேலும் இதன் தாக்கம் ஆறு மாதங்கள் வரை இருக்கலாம்.

இந்தியாவில் சந்திர கிரகணம்

இதனையடுத்து பெரும்பாலான கோயில்களில் வாயில்கள் மூடப்படும். இதனையடுத்து சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை மறுநாள் 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் 7 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.40 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறும்.

திருச்செந்தூர் கோயில் முக்கிய அறிவிப்பு

தொடர்ந்து, பகல் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 5 மணிக்கு பள்ளியறை மற்றும் நடை திருக்காப்பிடுதல் நடைபெறும். அன்றைய தினம் அனைத்து பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்கள் செல்லும் சிறப்பு தரிசன வரிசைகளிலும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் மறுநாள் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.