மிக விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் மது எதிர்ப்புப்போராளியும் வழக்கறிஞருமான நந்தினி சிறையிலடைக்கப்பட்டதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை உடனே விடுதலை செய்யச்சொல்லும் ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகிவருகின்றன.

நந்தினியின் போராட்டத்துக்கு அவரது தந்தை ஆனந்தனும் துணையாக இருந்த நிலையில், அவர் 2014-ம் ஆண்டு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அப்போது, வழக்கில் வாதாடிய நந்தினி, ஐபிசி பரிவு 328ன் படி டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்கப்படுவது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா? என்று கேள்வி எழுப்பினா்.இதனால், இது போன்ற கேள்விகளை எழுப்பமாட்டோம் என்று எழுதி கையெழுத்திட்டு கொடுக்குமாறு நீதிபதி கேட்டார். ஆனால், அவர்கள் எழுதிக்கொடுக்க மறுக்கவே நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கறிஞா் நந்தினிக்கு வருகின்ற ஜூலை 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரை ஜூலை 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றத்தை பலரும் தரக்குறைவாக விமர்சித்துவரும் நிலையில் அவர்கள் மீதெல்லாம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? தற்போது நந்தினி கேள்வி கேட்டதற்காக கைது செய்தது நியாயமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.தற்போது, நந்தினியை விடுதலை செய்ய வேண்டும் என்று #ReleaseNandhini என்ற ஹேஷ்டேக்கில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நந்தினியின் திருமணத்துக்கு இன்னும் சரியாக ஒருவாரமே இருக்கும் நிலையில் அவர் விடுதலை செய்யப்படவேண்டும். அவரது திருமணம் திட்டமிட்டபடி 5ம் தேதி நடக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.