எனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு அன்புமணியும் அவரது மனைவி செளமியாவும் தான் காரணம் என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கும்பல் திருந்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் இப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதலாக உருவெடுத்துள்ளது. நேற்று முன்தினம் ராமதாஸ் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராமதாஸ் அணியை சேர்ந்த பாமக எம்.எல்.ஏ அருள் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வாழப்பாடி வழியாக சென்றபோது அன்புமணி ஆதரவாளர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்

இது கடும் மோதலாக உருவாகி இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் எம்.எல்.ஏ அருள் உடன் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அன்புமணி ரவுடி கும்பலை தூண்டி விட்டு தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக அருள் குற்றம்சாட்டி இருந்தார். தனது ஆதரவாளர்களை தாக்கியதால் கோபம் அடைந்த ராமதாஸ், அன்புமணி கலவரத்தை தூண்டுவதாகவும், அவரது நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அன்புமணியும், செளமியா தான் காரணம்

இந்த நிலையில், இனிமேல் தனது ஆதரவாளர்கள் மீது கைவைத்தால் நடப்பதே வேறு என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ''இனிமேல் பாசத்துக்குரிய எனது கட்சிக்காரர்கள் மீது ஒரு சுண்டு விரல் பட்டாலும் அதற்கு அன்புமணியும், அவரது மனைவி செளமியா அன்புமணியும் தான் காரணம்.

அன்புமணி கும்பல் திருந்த வேண்டும்

ஏனென்றால் அவ்வளவு பாசத்தோடு அவர்களை நான் வளர்த்து வந்தேன். என் உயிரை விட மேலானவர்கள் என்று கூறி அவர்களை கட்டித்தழுவி என் உள்ளத்தில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தினேன். எனக்கு பொய் பேசத் தெரியாது. மனதில் என்ன நினைக்கிறனோ அதை அப்படியே பேசி விடுவேன். நான் பேசிய இந்த செய்தியை உங்கள் மூலமாக கொண்டு சென்று அன்புமணியும், அவரைச் சேர்ந்த ஒரு கும்பலும் திருந்த வேண்டும் என்று இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.