நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராமதாஸ் தனது மனதில் இருந்ததை வெளிப்படுத்திவிட்டதாகவும், கீழடியில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும், நீட் தேர்வுக்கு எதிராக விஜய் கூறிய கருத்துக்கு தானும் உடன்படுவதாகவும் தெரிவித்தார்.
ராமதாஸ் மனதில் இருந்ததை கொட்டி விட்டார்
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளிக்கையில்: தகப்பன் போல அன்பு வைத்திருந்த தலைவர் ராமதாஸ். அவருக்கு இவ்வளவு வருத்தம் இருக்கிறது என்பது அவர் பேசுகையில் தான் தெரிகிறது. இது ஆறும் காயம். ஆகவே இருவரும் அருகருகே அமர்ந்து பேசி தீர்க்கும் சூழல் இல்லாததால் பொதுவெளியில் பேசுகின்றனர். ராமதாஸ் மனதில் இருந்ததை கொட்டி விட்டார் எனவே ஆறிவிடும். இவர்கள் சண்டையால் நாட்டு மக்களுக்கு என்ன இழப்பு. விலைவாசி ஏதும் ஏறி விட்டதா? இது சரியாகவேண்டிய பிரச்சனை தான் என்றார்.
சமஸ்கிருதத்தில் ஏன் கல்வெட்டு வைத்தார்?
கீழடியில் முழுமையான ஆய்வை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு ஆய்வு செய்தனர். ஆனால் அந்த பொருட்களையும் பெங்களூருக்கு கொண்டு சென்று வைத்து விட்டனர். தமிழர்களுக்கு பெருமை தருவதை அவர்களால் ஏற்க முடியாது. தமிழை பெருமையாக பேசும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் ஏன் கல்வெட்டு வைத்தார்? தமிழுக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பை ஏன் திமுக எம்.பி.க்கள் கேள்வி கேட்கவில்லை என்றார்.
விஜய் பேசிய கருத்துக்கு உடன்படுகிறேன்
திராவிட குடும்பத்திற்குள் கன்னடம் இருக்கிறது என்றால் ஏன் தண்ணீர் கேட்டால் மறுக்கிறார்கள். கமல் பேசியதற்கு எதற்கு எதிர்க்கிறார்கள்? நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல. நீட்டுக்கு எதிராக தமிழகம் மட்டுமே போராடுகிறது. நீட் பயிற்சி எனும் பெயரில் முதலாளிகள் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு தான் அது வழியமைத்துள்ளது என தெரிவித்தார்.
விஜயை எதிர்த்து போட்டியிடுவதற்கா நான் கட்சி ஆரம்பித்து நடத்துகிறேன்? உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என சீமான் கூறினார்.


