பாமக தலைவர் அன்புமணி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கைகோர்த்துள்ள நிலையில், ராமதாஸ் இந்த கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சென்றுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக பாமக நிறுவனர் தனது தரப்பு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ''பாமகவில் இருந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 4,109 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். நாங்கள் சேரும் கூட்டணி தான் வெற்றி பெறும்'' என்று தெரிவித்தார்.

அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களை போன்று ஆண்களுக்கும் நகர பேருந்தில் இலவச பயணம், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவின் இந்த முதற்கட்ட தேர்தல் அறிக்கை குறித்து ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''ஓட்டு வாங்குவதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மக்கள் தான் தீர்ப்பளிப்பார்கள்'' என்றார்.

தேர்தல் ஆணையத்தில் கடிதம்

பாமக தலைவர் அன்புமணி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கைகோர்த்துள்ள நிலையில், ராமதாஸ் இந்த கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சென்றுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில், ''பாமகவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும், கூட்டணியை முடிவு செய்யவும் அன்புமணிக்கு உரிமை இல்லை. ஆகவே அதிமுகவுடன் அன்புமணி நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது. பாமக பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.