- Home
- Tamil Nadu News
- திமுக அரசை பாராட்டித் தள்ளிய ராமதாஸ்.. அறிவாலயத்தில் தஞ்சமடையும் தைலாபுரம்?.. உ.பி.க்கள் குஷி!
திமுக அரசை பாராட்டித் தள்ளிய ராமதாஸ்.. அறிவாலயத்தில் தஞ்சமடையும் தைலாபுரம்?.. உ.பி.க்கள் குஷி!
விசிகவும், பாமகவும் பரம எதிரிகளாக உள்ள நிலையில், திருமாவளவன் இருக்கும் திமுக கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், 'அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். என்ன வேண்டுமானாலும் நடக்கும்' என்று கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்த அன்புமணி
பாமகவில் தந்தை, மகன் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரம் அடைந்து வரும் நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெறுள்ளதாக அன்புமணி அதிரடியாக அறிவித்து விட்டார். ராமதாஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் கடும் எதிர்ப்பு
''பாமக தேர்தல் கூட்டணி குறித்து சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் சட்டத்திற்குப் புறம்பானவை. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பின்படி, பாமகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் எனக்கே உள்ளது.
ஆகவே அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது. நான் பாமக தலைவரானதை நீதிமன்றமும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆகவே பாமகவில் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கே உள்ளது'' என ராமதாஸ் அதிரடியாக தெரிவித்து இருந்தார்.
திமுக அரசை புகழந்து தள்ளிய ராமதாஸ்
இதனால் ராமதாஸ் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கை கொடுப்பாரா? இல்லை திமுக கூட்டணியில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக அரசை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸிடம், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி எப்படி இருக்கிறது? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
ஸ்டாலின் ஆட்சி நன்றாக உள்ளது
அதற்கு பதில் அளித்த ராமதாஸ், ''முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி நன்றாகத்தான் உள்ளது'' என்று தெரிவித்தார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாமக திமுக அரசை எந்த அளவுக்கு விமர்சனம் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். பல்வேறு விவகாரங்களில் ராமதாஸும் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சனம் செய்துள்ளார்.
திருமாவளவனும் ராமதாஸுக்கு பிரச்சனை இல்லை
ஆனால் இப்போது ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளது அவர் திமுகவுடன் கூட்டணி சேருவதை உறுதிப்படுத்தியுள்ளது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசிகவும், பாமகவும் பரம எதிரிகளாக உள்ள நிலையில், திருமாவளவன் இருக்கும் திமுக கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், 'அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். என்ன வேண்டுமானாலும் நடக்கும்' என்று கூறியுள்ளார்.
திமுக உடன்பிறப்புகள் குஷி
ஆகவே நாங்கள் திமுக கூட்டணியில் சேர திருமாவளவன் ஒரு தடையல்ல என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் ராமதாஸ். திமுகவுடன் கூட்டணி வைப்பதாக ராமதாஸ் நாளை அதிகாரப்பூர்வமாக அறிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக உடன்பிறப்புகளும், ராமதாஸ் தரப்பு பாமகவினரும் குஷியடைந்துள்ளனர்.

