- Home
- Tamil Nadu News
- அதிமுக பக்கம் தாவிய அன்புமணி.. 'செக்' வைத்த ராமதாஸ்.. முக்கிய அறிவிப்பு.. இபிஎஸ் ஷாக்!
அதிமுக பக்கம் தாவிய அன்புமணி.. 'செக்' வைத்த ராமதாஸ்.. முக்கிய அறிவிப்பு.. இபிஎஸ் ஷாக்!
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அன்புமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்த அன்புமணி
பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாக அன்புமணி இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸும் செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். இந்த நிலையில், பாமகவுடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்தியது சட்டவிரோதம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
பாமகவில் என்னுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும்
பாமகவுடன் என்னுடனோ அல்லது வேறு யாருடனோ மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியும். அன்புணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார். மேலும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ஜனவரி 9ம் தேதி முதல் தைலாபுரம் இல்லத்தில் விருப்ப மனுக்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
செய்திகள் அடிப்படையற்றவை
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் சட்டத்திற்குப் புறம்பானவை.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பின்படி, கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் எனக்கே (ராமதாஸ்) உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சட்டப்படி இடமில்லை
கடந்த 17.12.2025 அன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவரான நானே மீண்டும் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த முடிவை நீதிமன்றமும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தச் சூழலில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்தி எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சட்டப்படி இடமில்லை.
அனைத்தும் சட்டவிரோதமானவை
அப்படி அவர் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகவே கருதப்படும். எனவே, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச விரும்பினால், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைமையிடம் மட்டுமே பேச வேண்டும்.
அன்புமணியுடன் பேசப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் பாட்டாளி மக்கள் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.

