வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளதாக இரு கட்சி தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள பழனிசாமியின் வீட்டிற்கு நேரில் வந்த அன்புமணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார்.
முந்திக்கொண்ட அன்புமணி
பாமகவில் தந்தை, மகன் இடையேயான மோதல் காரணமாக தற்போது அக்கட்சி இரு தரப்பாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அன்புமணி இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என ராமதாஸ் முன்னதாகவே தெரிவித்துவிட்டார். மேலும் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. இதனிடையே பாமகவின் எந்த தரப்பு திமுக கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் உடனடியாக வெளியேறிவிடுவோம் என தெரிவித்துவிட்டதால் இரு தரப்புக்கும் அதிமுக, தவெக மட்டுமே வழியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் யார் அதிமுக கூட்டணியில் முதல் நபராக இணைவது என இரு தரப்பும் போட்டிப்போட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அன்புமணி தரப்பு அதிமுகவில் இணைந்துள்ளது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
கூட்டணியை உறுதிபடுத்தியதைத் தொடர்ந்து அதிமுக, பாமக தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுகையில், “அதிமுக, பாஜக கூட்டணியில் தற்போது பாமகவும் இணைந்துள்ளது. மொத்தமாக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது என எங்களுக்குள் நாங்கள் முடிவு செய்துவிட்டோம். எங்களது வெற்றிக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளனர். பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்..
மேலும் பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், “கிராமங்கள முதல் நகரங்கள் வரை திமுக மீது மக்கள் கோபத்தில், ஆத்திரத்தில் உள்ளனர். எங்கள் நடைப்பயணத்தின் போது அது வெளிப்பட்டது. திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைக்கும்.


