பாமக தேர்தல் கூட்டணி குறித்து அன்புமணி அறிவித்துள்ளது சட்டத்திற்குப் புறம்பானவை. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பின்படி, பாமகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் எனக்கே உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கைகோர்த்துள்ளன. இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அன்புமணி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். திமுகவை வீழ்த்துவதற்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் தெரிவித்தனர். ஏற்கெனவே பாமக ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என பிரிந்து கிடக்கும் நிலையில், அன்மணி அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அன்புமணி, அதிமுக கூட்டணி செல்லாது

''பாமக தேர்தல் கூட்டணி குறித்து அண்புமணி அறிவித்துள்ளது சட்டத்திற்குப் புறம்பானவை. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பின்படி, பாமகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் எனக்கே உள்ளது. ஆகவே அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது. நான் பாமக தலைவரானதை நீதிமன்றமும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆகவே பாமகவில் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கே உள்ளது'' என ராமதாஸ் கூறியிருந்தார்.

அன்புமணிக்கு உரிமை இல்லை

இந்த நிலையில், அன்புமணி, அதிமுக கூட்டணியை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில், ''பாமகவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும், கூட்டணியை முடிவு செய்யவும் அன்புமணிக்கு உரிமை இல்லை.

அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்

ஆகவே அதிமுகவுடன் அன்புமணி நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது. பாமக பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். மகன் வைத்த கூட்டணிக்கு எதிராக ராமதாஸ் தேர்தல் ஆணையம் சென்றது எடப்பாடி பழனிசாமிக்கும், அன்புமணிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.