பாமகவில் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பாமக முக்கிய நிர்வாகி பாலு நீக்கப்பட்டு, வி.எஸ்.கோபு நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமதாஸ் - அன்புமணி இடையே தொடரும் மோதல் : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் ஓகே சொல்லியிருந்த நிலையில், அன்புமணி பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பாமக- பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்தது. அடுத்தாக நடைபெற்ற பொதுக்குழுவில் இளைஞர் அணி தலைவராக தனது பேரன் சுகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால் இதற்கு மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தனி அணியாக செயல்படும் வகையில் அறிவிப்பு வெளியிட்டார்.
நிர்வாகிகளை நீக்கிய ராமதாஸ்- மீண்டும் சேர்த்த அன்புமணி
இந்த மோதல் போக்கை சரி செய்ய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இரு தரப்பும் விட்டுக்கொடுக்காமல் சென்றதால் மோதல் முற்றியது. ஒரு கட்டத்தில் அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை நீக்கியும் வந்தார். புதிய மாவட்ட தலைவர்களை அறிவித்தார்.
ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை நீக்கி வந்தாலும் அன்புமணி ஒரு புறம் நீக்கத்தை ரத்து செய்து பழைய நிர்வாகிகளே நீடிப்பார் என அறிக்கைகள் வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 35 மாவட்ட செயலாளர்கள், 16 மாவட்ட தலைவர்கள், பொருளாளார் ஒருவர் நீக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய தினம் மட்டும் திருவண்ணாமலை, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மாநில துணை தலைவராக முன்னாள் திருத்தனி சட்டமன்ற உறுப்பினர் ரவி ராஜ் உள்ளிட்டவர்களை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
வழக்கறிஞர் பாலுவின் பதவியை பறித்த ராமதாஸ்
இந்த நிலையில் பாமகவின் முக்கிய நிர்வாகியான வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவராக இருந்த பாலுவையும் நீக்கம் செய்யப்பட்டு வழக்கறிஞர் வி. எஸ் கோபுவினை நியமனம் செய்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பாமகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.