பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கி அறிவிப்புகள் வெளியிடுவதால் கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
Ramadoss dissolves PMK executive committee : பாமகவில் அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தந்தை - மகன் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பாமக நிர்வாகிகள் தவியாய் தவித்து வருகிறார்கள். யாருக்கு ஆதரவாக நிற்பது என்று கூட தெரியாமல் விழி பிதிங்கியுள்ளனர். ஏனென்றால் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளவர்களை நீக்கி ராமதாசும், ராமதாசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் நீக்கி அன்புமணியும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள். இதனால் மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. கடைசி வரைக்கும் நான் தான் பாமக தலைவர் என ராமதாஸ் தெரிவித்து வருகிறார். அன்புமணியோ பொதுகுழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான் என கூறி வருகிறார்.
பாமக நிர்வாக குழுவை கலைத்த ராமதாஸ்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் 18 நிர்வாகிகளை கொண்ட பாமக நிர்வாக குழுவை ராமதாஸ் கலைத்துள்ளார். இந்த குழுவில் பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ்,திலகபாமா,பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் புதிதாக ராமதாஸ் உருவாக்கியுள்ள குழுவில் பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கெளரவ தலைவர் ஜி கே. மணி புதா, அருள்மொழி, அன்புமணி ராமதாஸ், கரூர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவோடு ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாமக மூத்த தலைவர் ஜி.கே. மணி, உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லயென கூறினார். மருத்துவர் ராமதாஸோடு இறுதிவரை பயணம் செய்வது என உறுதியாக உள்ளேன். பாமக தமிழ்நாட்டில் ஒரு வலிமையான கட்சியாக பேசப்பட்ட நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு குழப்பமான சூழ்நிலை காரணமாக என்னைபோலவே, கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கும் கடுமையான மன உளைச்சலில் உள்ளதாக தெரிவித்தார்.
வேதனையில் பாமக நிர்வாகிகள்- ஜி.கே.மணி
தினந்தோறும் இரு தரப்பிலிருந்தும் வரக்கூடிய செய்திகள் கட்சியில் அனைவருக்கும் குழப்பத்தையும், வேதனையாகவும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை என கூறினார். எனவே பாமகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வு கிடைக்க இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசினால் மட்டுமே முடியும் என கூறினார். பாமக பழைய நிலைமைக்கு மேல் கொண்டு ஆட வேண்டும் அதற்கு இருவரும் பேசி நல்ல தீர்வு எட்ட வேண்டும்.
இருவரும் பொறுப்பாளர்களை நியமிப்பதும், நீக்குவதும் தீர்வாக அமையாது. குழப்பத்தை தான் ஏற்படுத்தும். மருத்துவர் அய்யா வழியில் எல்லோரும் நடக்க வேண்டும். மருத்துவர் அன்புமணிய கட்சியில் முன்னிலைப்படுத்தி, முதல் வேட்பாளர் என அறிவித்துள்ளோம். அன்புமணியை வலிமைப்படுத்தியுள்ளோம் இரு சக்திகளும் ஒன்றாக சேர்ந்தா தான் வலிமையாக இருக்கும். இல்லையென்றால் நலிவு தான் ஏற்படும் என ஜி.கே.மணி வேதனையோடு கூறினார்.
