அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணியின் தந்தையும், பாமக நிறுவனருமான ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் கட்சியைக் கைப்பற்றுவதற்காக அன்பமணி பம்மாத்து வேலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று விழுப்பரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கி குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அடுத்ததாக கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகின்ற 25ம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவின் தலைவர் அன்புமணி கிடையாது. நாங்கள் தொடுத்த வழக்கில் அவருக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை என்பதை தேர்தல் ஆணையமும், டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தி உள்ளது. பல மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது. எனது பெயரையும் அவர் பயன்படுத்தக் கூடாது.

அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். கட்சியைக் கைப்பற்ற அன்புமணி பம்மாத்து வேலைகளை செய்து வருகிறார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவருக்கு பல்வேறு பதவிகளை வழங்கி அழகு பார்த்தவன் நான். தமிழகம் முழுவதும் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல வளர்த்த கட்சி தான் பாமக. எனக்கு கூட்டணி தொடர்பாக பேச நிர்வாகக் குழுவில் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இனி அவர் அன்புமணி ராமதாஸ் அல்ல, அன்புமணி மட்டுமே. அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன். ஆனாலும் அவர் வேட்புமனுக்களை வசூலித்து வருகிறார். தவறான புள்ளி விவரங்களைக் கொடுத்து தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றிய அன்புமணி தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி செயல்படுகிறார். அவர் மீது நிலுவையில் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.