பாமக தலைவர் அன்புமணியும், ராமதாஸ் பக்கம் உள்ள ஜி.கே. மணியும் ஏ.கே.மூர்த்தி மகன் திருமண விழாவில் நேருக்கு நேர் சந்தித்து வணக்கம் வைத்துக் கொண்டது பாமகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே மூர்த்தியின் மகன் திருமணத்தில் பாமக தலைவர் அன்புமணி மற்றும் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் வணக்கம் வைத்துக் கொண்டனர். கடந்த சில மாதங்களாக அன்புமணி -ராமதாஸ் இடையே அரசியல் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டாக்டர் ராமதாஸின் பக்கம் ஜி.கே. மணி எம்.எல்.ஏ மற்றும் சேலம் அருள் ஆகியோர் உள்ளனர்.
நடுநிலை வகித்து வந்த ஏ.கே.மூர்த்தி
பாமக எனும் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அன்புமணி ராமதாஸ் தரப்பில் பல முக்கியமான தலைவர்கள் உள்ளார்கள். பாமகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், டாக்டர் ராமதாஸின் குடும்ப சம்பந்தியுமான ஏ.கே.மூர்த்தி, நெருங்கிய உறவினராகிவிட்டதால் தந்தை மற்றும் மகன் என இருதரப்பிலும் சேராமல் நடுநிலை வகித்து வந்தார்.
வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி கே மணி
இந்த நிலையில் ஏ.கே. மூர்த்தியின் மகன் திருமணம் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஜி.கே. மணி கலந்து கொண்டார். அப்போது எதிரில் வந்த அன்புமணி ராமதாஸுக்கு அவர் வணக்கம் வைத்தபோது அன்புமணியும் அவருக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்தார்.

விரைவில் ஒன்று சேர்வார்களா?
இதைப் பார்த்த கட்சிக்காரர்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி போயினர். அன்புமணி திரும்ப வணக்கம் வைக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் வணக்கம் வைத்திருப்பதால் சுமூக பேச்சுவார்த்தை நடைபெறும். நிச்சயம் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி தரப்பு ஆகியோர் விரைவில் ஒன்று சேர்ந்து வலுவான பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் செயல்பட தொடங்கும் என பேசிக்கொண்டனர் திருமணத்திற்கு வந்திருந்த பாமகவினர்.
ராமதாஸ் நடத்திய போரட்டங்களில் கூட்டம் இல்லை
இதுமட்டுமின்றி அண்மையில் டாக்டர் ராமதாஸ் நடத்திய போராட்டங்களுக்கு பல இடங்களில் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. குறிப்பாக மா.கா.ஸ்டாலின் தலைமையில் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட கூட்டம் மற்றும் சேலம் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டம் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தை தவிர வேறு எங்கும் பெரிய அளவில் கட்சி தொண்டர்கள் கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறங்கி வரும் ராமதாஸ்
இதனால் டாக்டர் ராமதாஸ் சற்று மனமடைந்து காணப்படுவதாகவும் தனது பிடிவாதத்துடன் கூடிய போர் வனத்தில் இருந்து சற்று தளர்வடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அன்புமணி தரப்பு சமாதான பேச்சுவார்த்தையின் போது ராமதாஸ் சற்று இறங்கி வருவார் என கூறப்படுகிறது.


