- Home
- Tamil Nadu News
- அப்போ இலை இப்போ தென்னந்தோப்பு.. தவெக விஜய் உடன் கூட்டணி சேரும் சசிகலா.? வெளியான சீக்ரெட்
அப்போ இலை இப்போ தென்னந்தோப்பு.. தவெக விஜய் உடன் கூட்டணி சேரும் சசிகலா.? வெளியான சீக்ரெட்
வி.கே. சசிகலா "அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற புதிய கட்சியில் இணைந்து அதன் தலைமையை ஏற்றுள்ளார். "தென்னந்தோப்பு" சின்னத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

சசிகலா புதிய கட்சி பெயர் அறிவிப்பு
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில் வி.கே. சசிகலா தனது அரசியல் பயணத்தை மீண்டும் வலுப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் முக்கியத் தலைவருமான அவர், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய அரசியல் முடிவை அறிவித்தார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக முன்பே அறிவித்திருந்த அவர், இன்று சென்னை போயஸ் கார்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அவர் இணைந்துள்ள கட்சியின் பெயர் “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியை ஒரு தொண்டர் ஆரம்பித்திருந்ததாகவும், அதன் நோக்கம் மற்றும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தான் அதில் இணைந்து தலைமையை ஏற்றுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சி மக்கள் ஆதரவோடு முன்னேறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
தென்னந்தோப்பு சின்னம்
புதிய கட்சிக்கான தேர்தல் சின்னமாக “தென்னந்தோப்பு” தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இந்த சின்னம் ஒற்றுமை, குடும்ப உணர்வு மற்றும் மக்களுடன் இணைந்து செயல்படுதல் போன்ற கருத்துகளை பிரதிபலிப்பதாக சசிகலா கூறினார். "இது ஒரு குடும்பத்தைப் போன்ற அமைப்பைக் குறிக்கும் சின்னம். மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதை இது நினைவூட்டுகிறது" என்றும் அவர் விளக்கினார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தக் கட்சி போட்டியிடும் என்றும் சசிகலா உறுதி அளித்தார். அந்தத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும், மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெக பற்றி சசிகலா பதில்
அதே நேரத்தில், தற்போதைய திமுக ஆட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார். மாநில மக்களின் பிரச்சினைகளை அரசு சரியாக கையாளவில்லை என்றும், அதற்கு மாற்றாக மக்களுக்காக செயல்படும் ஒரு அரசியல் சக்தி தேவைப்படுவதால்தான் புதிய கட்சி முயற்சி தொடங்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றும் சசிகலாவுடன் தெரிவித்தார். குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான அரசியல் இயக்கத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், ஒரே சிந்தனையுடன் இருக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் என்று கூறினார். 2026 தேர்தலை முன்னிட்டு சசிகலாவின் இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

