வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் நேற்று மாலை திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் நாட்றம்பள்ளி - திருப்பத்தூர் சாலையில் வேட்டப்பட்டு கூட்ரோடு  அருகே அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நின்றது.

இதனால் அப்பகுதி வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, சாலையின் இரு பக்கமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நின்றன.  இருசக்கர வாகனத்தில் வந்த பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். 

அப்போது , அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்று தண்ணீரில் சிக்கி இன்ஜின் பழுதாகி பாதியில் நின்றது.பின்னர், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி லாரியை இழுத்து சென்றனர். 

இதற்கிடையே, திருப்பத்தூரிலிருந்து நாட்றம்பள்ளி நோக்கி சென்ற தனியார் பஸ் ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீரில் சிக்கி இன்ஜின் பழுதாகி நின்றது. பஸ்சை சுற்றி தண்ணீர் பெருமளவு தேங்கி இருந்ததால் அதில் இருந்த 35 பயணிகள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். 

தகவலறிந்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் வந்து பஸ்சில் சிக்கி இருந்த 35 பயணிகளை ஏணி மூலமாக பத்திரமாக மீட்டனர். பின்னர் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி தண்ணீரை வெளியேற்றினர். பழுதாகி நின்ற பஸ்சை இரவு 7.30 மணியளவில் மீட்டனர்.