இந்த பாஜக பெண் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.221 கோடி.. வியக்க வைக்கும் சொத்து விவரம்..
ஹைதராபாத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தனக்கு ரூ. 221 கோடி சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் அவர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியாகி உள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதாவின் குடும்பச் சொத்து மதிப்பு ரூ. 221.37 கோடி என்று தெரிவித்துள்ளார், செகந்திராபாத்தில் வசிக்கும் 49 வயதான இவர், சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் தெலுங்கானாவின் பணக்கார வேட்பாளர்களில் ஒருவராக அவர் மாறி உள்ளார். மாதவி லதா புதன்கிழமை தனது வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் குடும்ப சொத்து விவரங்கள் குறித்து தெரிவித்துள்ளார்..
கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை ராகுலுடன் யாத்திரை நடந்த காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்!
பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் ரூ.25.20 கோடி முதலீடு உட்பட ரூ. 31.31 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாக அவர் அறிவித்தார். விரிஞ்சி லிமிடெட் நிறுவனத்தில் ரூ. 7.80 கோடி முதலீடு செய்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ. 3.78 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். .
தனது கணவருக்கு விரிஞ்சி லிமிடெட் நிறுவனத்தில் ரூ. 52.36 கோடி மதிப்புள்ள பங்குகள் உட்பட ரூ. 88.31 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன. தங்களின் 3 பிள்ளைகளும் ரூ. 45 கோடிக்கு மேல் அசையும் சொத்துக்களை வைத்துள்ளனர் என்றும் மாதவி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு: விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!
தனது அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 6.32 கோடி எனவும், தனது கணவரின் அசையா சொத்து மதிப்பு ரூ. 49.59 கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை அவரின் அசையா சொத்துக்களில் அடங்கும். மாதவி லதாவின் கடன்கள் ரூ, 90 லட்சம் மற்றும் அவரது கணவரின் கடன்கள் ரூ. 26.13 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2022-23ல் தனது வருமானம் ரூ. 3.76 லட்சமாகவும், 2021-22ல் ரூ. 1.22 கோடியாகவும் இருந்தது என்றும் அவர் கூறி உள்ளார். அதே போல் தனது கணவர் விஸ்வநாத்தின் வரும் 2022-23ல் ரூ 2.82 கோடியாகவும், 2021-22ல் ரூ 6.86 கோடியாகவும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் மாதவி மீது கிரிமினல் வழக்கு ஒன்று உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 295-A-ன் கீழ் பேகம் பஜார் காவல் நிலையத்தில் கடந்த வாரம் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சித்தி ஆம்பர் பஜார் வட்டத்தில் அமைந்துள்ள மசூதியில் அம்பு எய்வது போல் சைகை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.