பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு: விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மோடி மீறிய புகாரில் பாஜக விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
முஸ்லிம்கள் குறித்து பேசி பிரதமர் மோடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, “பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.” என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை ராகுலுடன் யாத்திரை நடந்த காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மத உணர்வுகளை தூண்டும் வகையில், வெறுப்பு பேச்சு பேசியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மோடி மீறிய புகாரில் பாஜக விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ராகுல் காந்தி மீதான புகார் குறித்தும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மதம், சாதி, சமூகம், மொழி அடிப்படையில் வெறுப்பு மற்றும் பிளவை ஏற்படுத்துவதாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.