ஜெயலலிதாவி்ன் செல்லப்பிள்ளையாக இருந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் அரசியல் களத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படுவார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையனை அனைத்து தொண்டர்களுக்கும் அவரை தெரியும். பழனிசாமி தலைமை வேண்டாம் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அதை கூட அவர் சொல்லவில்லை. ஆனால் கட்சி இணைப்பு வேண்டும் என்று தான் சொல்கிறார். ஆனால் யாரையும் ஏற்க மாட்டேன் என்று இபிஎஸ் உள்ளார்.

நீக்க வேண்டியவர் தலைவராக இல்லை. தான்தோன்றி தலைவராக தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதா சுற்று பயணம் அனைத்திலும் செங்கோட்டையன் இருந்தார். இப்படிப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். ஜெயலலிதா தான் நிரந்தரமான பொதுச்செயலாளர் என்று இருந்ததை நீக்கிவிட்டு நான் பொதுச்செயலாளர் என்று சொல்லும் இபிஎஸ் இடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

ஜெயலலிதாவின் செல்ல பிள்ளையாக செங்கோட்டையன் இருந்தார். சேலம் மாவட்டத்தில் செங்கோட்டையன் நடந்தால் பின்னால் ஓடிக்கொண்டே இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்படி எந்த இடத்தில் இருந்து இப்போது பணம் பதவி வந்த பிறகு எப்படி இருக்கிறார். சின்னம்மா கையில் பதவி கொடுத்தார். நான்காவது இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி போய்விடுவார். இதே நிலை நீடித்தால் சீமான் எடப்பாடி பழனிசாமி இடையே தான் போட்டி இருக்கும்.

திமுக தவெக தான் 2026ம் ஆண்டு போட்டி இருக்கும். கொடநாடு கொலை இப்போது என்வாயிற்று? இப்படி எதிலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நமக்கு முட்டாள் பையன் வேண்டும் என திமுக நினைக்கிறார்கள் பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டால் தோல்வி இருக்காது என்று திமுக தலைமை உள்ளது. செங்கோட்டையன், ஓபிஎஸ் உட்பட நாங்கள் இருக்கும் இடம் தான் அதிமுக என நீதிமன்றம் விரைவில் சொல்லும்” என்று தெரிவித்துள்ளார்.