கோவையில் தேமுதிக நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் இடையூறு வழங்குவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்த நிலையில், உங்க வேலையை எங்க கிட்ட வச்சுக்காதீங்க என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே வந்திருக்க வேண்டும் ஆனால் தாயார் மறைவினால் வர இயலாமல் போனது என கூறினார். புயலே வந்தாலும் ஆலோசனை கூட்டம் நடக்கும், எவ்வித இடையூறும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது என தெரிவித்தார்.
தேமுதிகவைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள் என்று திமுகவை பெயர் குறிப்பிடாமல் கூறிய அவர் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று என்னும் கூட்டம் அவர்கள் என்றும் யார் இடையூறு செய்தார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என கூறினார். உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் உங்களைப் போன்று லஞ்சம் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் நாங்கள் அல்ல யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் காசு கொடுக்காமல் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
கேப்டன் மறைந்து விட்டார் கட்சி மறைந்து விட்டது என்று கூறியவர்களெல்லாம் தற்பொழுது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள். தேமுதிகவை பார்த்து பலரும் வியந்து போயிருக்கிறார்கள். ஆளும் கட்சியும் இல்லை, தற்போது ஆண்ட கட்சியும் இல்லை. ஆனால் நம்முடைய கட்சி உள்ளது. நாம் தேர்தலுக்கு தயாராக வேண்டும். 2026 இல் தேமுதிக மிகப்பெரிய வெற்றியை பெரும் என தெரிவித்தார்.
நாம் கேப்டன் போட்டுக் கொடுத்த பாதையிலே பயணிப்போம். வெகுவிரைவில் இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் அறிவிக்கப்படுவார். அவர் ஜூனியர் கேப்டன் கோவையின் செல்ல பிள்ளை. கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர் அதற்குக் காரணம் மது விற்பனை தான். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பெண்கள் நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் நம்மை பாதுகாக்காது. மேலும் பெண்கள் லேட் நைட் யாரையும் சந்திக்காதீர்கள், ஏன் நாம் லேட்நைட்டில் வெளியில் செல்ல வேண்டும்? அந்த கல்லூரி மாணவி விமான நிலையம் பின்புறம் லேட் நைட் ஏன் சென்றீர்கள்? ஒரு பெண் எப்பொழுது தனியாக இரவில் தைரியமாக செல்கிறாரோ அப்பொழுதுதான் நாடு சுதந்திரம் அடைந்தது என்று காந்தி காலத்தில் இருந்து நாம் கூறிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருந்தும் தற்பொழுதும் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. நாம் ஜெயித்த பிறகு இது குறித்து பிரதமரை சந்திப்பேன். ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று அறிவித்தால் அதன்படி செயல்படுத்த வேண்டும். துபாய்க்கு இணையாக மாற்ற வேண்டும். தேர்தலுக்குப் பிறகு கோவை மற்றும் மதுரை மக்களுக்காக மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தேமுதிக குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.
SIR குறித்துப் பேசிய அவர், வட நாடுகளில் இருந்து பல பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இங்கு ஓட்டுரிமை கொடுத்து தமிழர்களாக மாற்றுவதாக பல்வேறு தகவல்கள் வருகிறது. இதன் பணி சுமையின் காரணமாக ஒரு பெண் அதிகாரி உயிரிழந்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் உண்மையாகவே பணி சுமை ஏற்படுகிறதா என்று ஆராய்ந்து பணி பாதுகாப்பு தர வேண்டும். இது அவர்களது கடமை. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கும் பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்களுக்கும் தான் ஓட்டுரிமை வழங்க வேண்டும்.
மக்களின் ஓட்டுகளை திருட வேண்டும் என்று நினைத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். இயற்கை வளங்களை எல்லாம் திருடிவிட்டு தற்பொழுது மக்களின் ஓட்டுகளையும் திருடுகிறீர்கள். இதை விட கேவலம் என்ன உள்ளது? எஸ் ஐ ஆர் என்றால் என்ன என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இதற்கு பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறினாலும் எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் அந்த திட்டம் வெற்றி பெறும். மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எந்த திட்டமாக இருந்தாலும் அது தோல்வி அடைந்தது தான் என தெரிவித்தார்.


