Asianet News TamilAsianet News Tamil

நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி. சீட் வழங்க எதிர்ப்பு!

நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Posters objection to giving Nellai MP seat to Nainar Nagendran in loksabha election 2024  smp
Author
First Published Jan 29, 2024, 12:47 PM IST

பாஜக மாநில துணைத் தலைவராகவும், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும் இருப்பவர் நயினார் நாகேந்திரன். நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்தபோது, ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் வெளிப்படையாக தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் கணிசமான செல்வாக்கு உள்ள நயினார் நாகேந்திரன் மக்களவைத் தேர்தலில் சீட் கிடைத்து வெற்றி பெற்றால், எப்படியும் மத்திய அமைச்சராகி விடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

பரிக்‌ஷா பே சார்ச்சா 2024: மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!

அதேபோல், கூட்டணியில் நெல்லை தொகுதி பாஜக வசம் வந்தால், கட்சி மேலிடமும் அவருக்குத்தான் சீட் கொடுக்கும் என தெரிகிறது. அதற்கு தகுந்தாற்போல், நயினார் நாகேந்திரனும் அங்கு முகாமிட்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்துள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் கட்சி தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே தாமாக முந்தி கொண்டு நயினார் நாகேந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரது நம்பிக்கையின்படி கட்சி மேலிடமும் அவருக்கே வாய்ப்பளித்தது. அதேபோல், மக்களவை தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அவருக்கு எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Posters objection to giving Nellai MP seat to Nainar Nagendran in loksabha election 2024  smp

இதுதொடர்பாக தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழக  மாநில இளைஞரணி செயலாளர் பந்தல்ராஜா சார்பில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “புறக்கணிக்காதே புறக்கணிக்காதே வெள்ளாளர்களை புறக்கணிக்காதே, பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர்களை பாஜக புறக்கணிக்கிறதா? நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்பி சீட்டா? வெள்ளாளரே விழித்து கொள். திருநெல்வேலி எம்பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பாஜக படுதோல்வி சந்திக்கும், எச்சரிக்கிறோம்.” என அச்சிடப்பட்டுள்ளது.

பீகாருக்குள் இன்று நுழையும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!

நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என முழு நம்பிக்கையில் இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios