Asianet News TamilAsianet News Tamil

பீகாருக்குள் இன்று நுழையும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பீகார் மாநிலத்துக்குள் இன்று நுழையவுள்ளது

Rahul Gandhi bharat jodo nyay yatra to enter Bihar today as nitish kumar left india bloc smp
Author
First Published Jan 29, 2024, 11:04 AM IST

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.

மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, நாகாலாந்து, அசாம், ஆகிய மாநிலங்களை கடந்து மேற்குவங்க மாநிலத்துக்குள் கடந்த 25ஆம் தேதியன்று நுழைந்தது. இந்த நிலையில், ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் இன்று நுழையவுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு நிறைந்ததும், இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டமான கிஷான்கஞ் வழியாக அம்மாநிலத்துக்குள் ராகுலின் யாத்திரை நுழையவுள்ளது.

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் விலகிய நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழையவுள்ளது. பீகார் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியுடனான சூழல் சரியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"என் வார்த்தையை குறிச்சு வச்சுக்கோங்க..” நிதிஷ்குமார் கூட்டணி மாற்றம் குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து..

இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராகுலின் யாத்திரை அம்மாநிலத்துக்கு செல்லவுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு பிறகு, ராகுல் காந்தியின் முதல் பீகார் பயணம் இதுவாகும்.

கிஷான்கஞ்சில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார். அதைத் தொடர்ந்து, பக்கத்து மாவட்டமான பூர்னியாவில் நடைபெறவுள்ள பேரணியில் நாளையும், கதிஹாரில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பேரணியிலும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், சட்டமன்றக் கட்சித் தலைவருமான ஷகில் அகமது கான் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை பீகார் மாநிலத்தில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதி அராரியா மாவட்டம் வழியாக மீண்டும் மேற்குவங்க மாநிலம் செல்லவுள்ளது. பின்னர், ஜார்கண்ட் மாநிலம் செல்லும் ராகுலின்  யாத்திரை மீண்டும் பீகார் மாநிலம் திரும்பும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழக வீரர்கள்- சீமான் அதிரடி

பீகாரில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிபிஐ(எம்எல்)-எல் பொதுச்செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் பூர்னியாவில் நடைபெறும் ராகுலின் பேரணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நிதிஷ்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையேற்று அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், கூட்டணியில் இருந்து அவர் வெளியேறியுள்ளதால், லாலு பிரசாத், தீபாங்கர் ஆகியோர் மட்டும் ராகுலின் பேரணியில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios